இயேசுவின் பணிவாழ்வில் செபம்

ARTICALS
இயேசுவின் பணிவாழ்வு ஒரு செபம். அவர் போதித்தது வெறும் அறிவுக் குவியல் அல்ல அவரது வாழ்க்கை. செபமே இயேசுவின் வாழ்வு. இயேசுவின் வாழ்வே செபம். நற்செய்தி இயேசுவின் போதனை மட்டுமல்ல அவரது வாழ்க்கையை வாழ நமக்கு விடுக்கும் அழைப்பு. இயேசு அதிகாலையில் கருக்கலோடு எழுந்து புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். அங்கே செபம் செய்து கொண்டிருந்தார். (மாற்கு 1: 35)
இயேசு அதிகாலையில் தனிமையில் தன் தந்தையோடு தன் நேரத்தைச் செலவிடுகின்றார். தந்தையின் விருப்பத்தை அறிய முற்படுகின்றார். தன்னைத் தொடர்ந்து வந்து தன்னோடு செபத்தைப் பகிர்ந்து கொண்டு தந்தையின் விருப்பத்தை அறிய முற்பட வேண்டும் என்று இயேசு நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். இயேசுவின் பணிவாழ்வில் அவர் செய்த ஒவ்வொரு புதுமையும் ஒரு செபம். பசியாயிருந்தவர்கள் மீது இரக்கங்கொண்டு அப்பங்களைப் பலுகச் செய்தார். ஆந்த இரக்கம் செபம். புயலை அடக்கினார். “போதகரே மடிந்து போகின்றௌமே உமக்கு இரக்கம் இல்லையா?” என்றனர். அவர் எழுந்து காற்றைக் கடிந்து கடலை நோக்கி “இரையாதே சும்மா இரு” என்றார். காற்று நின்றது. பேரமைதி உண்டாயிற்று. கடலை நோக்கிய இயேசுவின் இந்தக் கட்டளை ஒரு செபம். தந்தையின் சித்தத்தினால் தன்னால் எல்லாம் ஆகும் என்ற இயேசுவின் நம்பிக்கை செபம்.
பேய்பிடித்தவனை குணமாக்கிய பின் இயேசு அவனைப் பார்த்து “உன் வீட்டுக்குப் போ ஆண்டவர் உன்மீது இரங்கி உனக்குச் செய்ததெல்லாம் அவர்களுக்கு தெரிவி” பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றி சொல்ல இயேசு கற்றுத் தருகின்றார். பத்துப் பேரை குணமாக்கிய பின் நன்றி சொல்ல வந்த ஒருவனிடம் “மற்ற ஒன்பது பேரும் எங்கே?” என இயேசு கேட்டு நன்றி என்கின்ற செபத்தை உணர வைக்கின்றார்.
கூட்டத்தினரிடையே “யார் என்னைத் தொட்டது?” என்று இயேசு கேட்கின்றார். பெரிய கூட்டம் அவரை அழுத்தும் அளவூக்கு நெருங்கி இருக்கிறார்கள். அவர்கள் அவரைத் தொடுவதை அவர் உணரவில்லை. ஒரே ஒருவர் தவிர. ஏனெனில் அவள் விசுவாசத்தோடு தொட்டாள். இறைவனில் முழு நம்பிக்கை கொள்ள இயேசு இதன்மூலம் விளக்குகின்றார்.
பன்னிரெண்டு சீடர்களையும் பணிக்காக இயேசு தயாரிக்கும் போது அவர்களோடு தன் பணியைப் பகிர்ந்து கொள்கின்றார். அந்த முக்கியமான நேரத்தில் “எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம்” எவ்வளவு அழகான செபம் இது. மக்கள் அவர்களுக்கு தேவையானவற்றை அளிப்பார்கள் என்பது இயேசுவின் நம்பிக்கை.
ஊமைப் பேய்பிடித்தவனை குணமாக்க சீடர்களால் முடியாமல் போனபோது “அதை ஓட்ட எங்களால் ஏன் முடியவில்லை? என்று அவரைத் தனிமையாய்க் கேட்டார்கள். அதற்கு அவர் இவ்வகைப் பேய் செபத்தினால் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது” என்றார். (மாற்று 9: 14 – 29)
செபத்தின் அவசியத்தையும் வல்லமையையும் இயேசு இங்கு வெளிப்படுத்துகின்றார். குழந்தைகளைத் தடுத்த போது “குழந்கைளை என்னிடம் வரவிடுங்கள் தடுக்க வேண்டாம் கடவுளின் அரசைக் குழந்தை போல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது” என்கிறார். பின்பு அவர் அவர்களை அரவணைத்து அவர்களை ஆசீர்வதித்து செபிக்கின்றார். இயேசு கோபித்துக் கொண்டதாக நற்செய்தியில் சொல்லப்படுகின்ற ஒரேயொரு சம்பவம் ஜெருசலேம் தேவாலயத்தில் வியாபாரிகளைத் துரத்துவது. “என் வீடு செபவீடு என்று எழுதப்பட்டிருக்கிறது நீங்கள் அதை கள்வர் குகையாக்கினீர்கள்”. செபத்தினதும் ஆலயத்தினதும் புனிதத் தன்மையை இயேசு தம் வாழ்வில் விளங்கப்படுத்துகின்றார்.
சபித்த அத்திமரம் பட்டுப்போனதைப் பார்த்து இராயப்பர் குறிப்பிட்டபோது “நீங்கள் செபத்தில் எதையெதை கேட்பீர்களோ அதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்று விசவசியுங்கள். உங்களுக்கு கைகூடும். நீங்கள் செபம் செய்யும் போது யார்மீதாவது உங்களுக்கு மனத்தாங்கல் இருந்தால் மன்னித்து விடுங்கள். அவ்வாறே வானகத்திலுள்ள உங்கள் தந்தையூம் உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவார்”. (மாற்கு 11: 20-26 )
செபம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இயேசு தம் வாழ்வில் இவ்வாறு கற்றுத்தருகின்றார். ஏழை விதவையின் காணிக்கையை இயேசு பாராட்டி “கொடுக்கின்ற பொருள் முக்கியமல்ல கொடுக்கின்ற மனம்தான் முக்கியம்” என்று சொன்ன ஒவ்வொரு சொல்லும் செபம்.
அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி “இது என் உடல்”இ கிண்ணத்தை எடுத்து நன்றிகூறி “இது என் இரத்தம்” என்று இயேசு பாடிய புகழ்பாடல் என்றும் எம்மோடு இருக்கும் அவரது செபம். “உள்ளே மனம் ஆர்வமுடையதுதான். ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள்” என்று சீடர்கள் மூலமாக நமக்குச் சொல்கின்றார்.
ஜெத்சமெனி தோட்டத்தில் தரையில் குப்புற விழுந்து “அப்பா தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடம் இருந்து அகற்றும். ஆனால் என் விருப்பப்படி அல்ல உம் விருப்பப்படியே ஆகட்டும்” என்று இயேசு செபித்த செபம்இ அவர் வாழ்வே ஒரு செபம் என்பதை நிரூபித்த ஒரு செபம். இயேசுவின் இறுதி நிமிடத்திலும் “தந்தையே! உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்ற செபத்தோடு உயிர் துறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *