இறைவனின் இரக்கத்தாலும், புனித ஆட்சிப்பீடத்தின் ஆதரவாலும்மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆகிய நாம் மறைமாவட்ட இறைமக்களுக்கு எழுதும் திருவருகைக்காலத் திருமடல் – 2024

CHURCH NEWS DIOCESE

மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆகிய நாம்

மறைமாவட்ட இறைமக்களுக்கு எழுதும்;

திருவருகைக்காலத் திருமடல் – 2024

இயேசுக் கிறிஸ்துவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
“நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!” (உரோமையா; 1:1).

திருவருகைக் காலம்

மார்கழி மாதம் பிறந்துவிட்டால் நம் மனங்கள் மகிழ்ச்சியில் திழைக்கும். காரணம் நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் பெருவிழா. இயேசுவின் வருகைக்காக நாம் நான்கு வாரங்கள் நம்மைத் தயாரிக்கின்றோம். இந்தக் காலத்தை ‘திருவருகைக்காலம்’ என்று அழைக்கின்றோம். இயேசுவின் இந்த வருகையை நாம் இரண்டு நிலைகளில் நோக்க முடியும். ஒன்று வரலாற்றில் இடம்பெற்ற இயேசுவின் வருகை. அதுதான் இயேசுவின் மானிடப் பிறப்பு. அதையே நாம் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். இதை வரலாற்று வருகை என்று அழைக்கின்றோம். இரண்டு,உலக முடிவில் இடம்பெற இருக்கும் இயேசுவின் இரண்டாவது வருகை. இதை மகிமையின் வருகை என அழைக்கின்றோம். முதல் வருகையின்போது மீட்பராக இரட்சகராக வந்த இயேசு. இரண்டாவது வருகையில் அரசராக தீர்ப்பிடுகின்ற நடுவராக வருவார்; என நாம் நம்புகின்றோம்.

திருவருகைக் காலத்தின் முதல் மூன்று வாரங்களிலும் இயேசுவின் இரண்டாவது வருகை பற்றிச் சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம். இந்நாட்களில் திருச்சபைத் தாய் நமக்கு திருப்பலி வாசகங்களாகத் தரும் இறைவார்த்தைகள் இயேசுவின் இரண்டாது வருகைபற்றிச் சிந்திக்க நம்மைத் தூண்டுகின்றன. டிசம்பர்; 16ஆம் திகதி தொடக்கம் நமக்குத் தரப்படும் இறைவார்த்தைகள் இயேசுவின் பிறப்பு விழாவுக்கு நேரடியாக நம்மைத் தயாரிக்க நம்மை அழைத்து நிற்கின்றன. எனவே திருவருகை காலத்தின் ஆழமான அர்த்தத்தை உணாந்து இக்காலத்தில் நமக்குத் தரப்படும் இறைவார்த்தைகளைக் கவனமாக வாசித்து தியானித்து, இயேசுவின் வரலாற்று வருகைக்கும்,இயேசுவின் மகிமையின் வருகைக்கும் நம்மைத் தயார்படுத்துவோமாக. “நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச்செய்ய விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவரும்” (லூக் 1:78இ79).

2025ஆம் ஆண்டு இயேசுவினுடைய பிறப்பின் யூபிலி ஆண்டு

பிறக்க இருக்கும் புதிய ஆண்டாகிய 2025ஆம் ஆண்டு நம் ஆண்டவர்; இயேசுக் கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாகப் பிறந்து 2025 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. இதை இயேசுவினுடைய மானிடப்பிறப்பின் 2025ஆம் ஆண்டு யூபிலி விழாவாக அகில உலகத் திருச்சபை முழுவதும் கொண்டாடும்படி நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்;. இந்த யூபிலி ஆண்டை மையப்படுத்தியதாக நம் மறைமாவட்டத்தின் மேய்ப்புப்பணித்திட்டங்கள் அமையவேண்டும் என்பதற்காக மன்னார் மறைமாவட்ட மேய்புப்பணித் திட்டமிடல் மாநாடு கடந்த ஒக்ரோபர் மாதம் 28,29, 30 ஆகிய தினங்களில் மன்னாரில் நடைபெற்றது. யூபிலி ஆண்டை முன்னிட்டு திருத்தந்தையால் வழங்கப்பட்ட “எதிர்நோக்கின் திருப்பயணிகள்” என்ற கருப்பொருளிலே இந்த மாநாடு நடாத்தப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இந்தத் தீர்மானங்களின் தொகுப்புக்கள் பங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த மறைமாவட்டத் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு மறைமாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பங்கும் ஆணைக்குழுவும் நிறுவனமும் தமது வசதி வாய்ப்பு சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்றுகூடல்களை நடாத்தி தீர்மானங்களை எடுத்து புதிய ஆண்டில் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலோட்டமாக அல்லாமல் ஆழ்ந்த அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் பங்குச் சமூகம் முழுவதும் ஒன்றிணைந்து இந்த யூபிலி ஆண்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். கிறிஸ்துவின்மேல் நாம் கொண்ட “எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது” (உரோ 5:5) என்ற இறைவாக்கிற்கு இணங்க நம்பிக்கையோடு நமது பணிகளை முன்னெடுப்போமாக!

பெருமழை மற்றும் வெள்ளம் ஏற்படுத்திய தாக்கங்கள்

அண்மையில் நமது நாட்டிலும் குறிப்பாக நமது மறைமாவட்டத்திலும் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பல மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். சிலருடைய வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்த நிலையில் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சம்புக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக போக்குவரத்துகளும் தடைப்பட்டன. விவசாயிகள் பலருடைய பயிர்கள் அழிவுக்குள்ளாகின. இவ்வாறு இந்தப் பெருமழை மற்றும் வெள்ளம் பல்வேறு பாதிப்புக்களை நமக்கு ஏற்படுத்தியது. பாதிப்படைந்த மக்களுக்கு அரச அதிகாரிகள் துரிதமாகச் செயற்பட்டு தம்மால் முடிந்த நிவாரணங்களை வழங்கி மக்களின் துயரங்களைத் துடைப்பதற்கு முயற்சித்தாகள். அதேபோன்று வாழ்வுதயம் போன்ற நமது மறைமாவட்டம் சார்ந்த அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைப் புரிந்தன. இவ்வேளையில் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு பாதிப்புக்குள்ளான மக்கள் விரைவில் தமது சுமுகமான வாழ்க்கைக்குத் திரும்ப இறைவனிடம் தொடாந்து மன்றாடுவோம்.

மன்னார் வைத்தியசாலை நிலவரம்

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் மகப்பேற்றின்போது ஒரு தாயும் சேயும் இறந்த துயரமான சம்பவம் நம் எல்லோருக்குமே மிகுந்த வேதனையை அளித்த ஒரு நிகழ்வாகும். இந்தத் துர்ப்பாக்கிய சம்பவத்தையடுத்து ஏற்பட்ட பதட்டநிலைமை, மக்களின் போராட்டங்கள், வைத்தியசாலை அதிகாரிகள் மட்டிலான எதிர்ப்புணர்வுகள் என்பன புரிந்துகொள்ளப்படக் கூடியவையே. ஆயினும் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான பாரபட்சமற்ற,நடுநிலையான விசாரணைகள் மற்றும் ஆய்வுகள் முடிவடைந்து உண்மைகள் வெளிவரும்வரை நாம் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட இந்தத் துர்ப்பாக்கிய சம்பவத்திலே உண்மையில் மருத்துவத் தவறுகள் நடந்திருக்குமாயின் சம்மந்தப்பட்டவர்கள் நீதியின்படி தண்டிக்கப்படுவதை உறுதிசெய்வோமாக. புனித பவுல் கூறுவதைப்போல “தம் வருகைக்காக விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்கும் நீதியூள்ள நடுவர் நீதியின் வெற்றிவாகையைத் தருவார் (2 திமோத்தேயூ 4:8) என நம்புவோமாக!

அதேவேளை சட்டத்தைக் கையில் எடுத்து, வைத்திய அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பது, வைத்தியசாலை உடமைகளைச் சேதப்படுத்துவது,வைத்தியசாலை அதிகாரிகளும் ஊழியர்களும் தமது கடமைகளைச் செய்வதற்கு இடையூறாக இருப்பது போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என எதிர்பார்த்திருப்போம். நாளாந்தம் வைத்தியசாலையை நம்பிச் செல்லும் ஆயிரமாயிரம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வைத்தியசாலை அதிகாரிகளுக்கும் பணியாளார்களுக்கும் நமது நிறைவான ஒத்துழைப்பை வழங்குவோம்.

நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலை

நமது நாட்டின் அரசியலில் எதிர்பாராத பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நாட்டில் ஜனாதிபதித் தேர்தலும் அதைத்தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்துள்ளன. என்.பி.பி எனப்படும் “தேசிய மக்கள் சக்தி” என்ற அரசியல் கட்சியைச் சார்ந்த திரு. அநுர குமார திசாநாயக்க அவாகள் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.அதேபோன்று என்.பி.பி. கட்சி பாராளுமன்றத் தேர்தலிலும் அறுதிப்பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. நாட்டின் வடக்குக் கிழக்கு மக்கள் என்றுமில்லாதவாறு இம்முறை இந்தக் கட்சிக்கு தமது அமோக ஆதரவை வழங்கியுள்ளனர்
இந்நிலையில் “வடக்கு, கிழக்கு, தெற்கு என நாட்டின் அனைத்து மக்களும் எம்மோடு கைகோர்த்துள்ளாகள்” என்று கூறினால் மட்டும் போதாது. தமிழ் மக்கள் இந்தப் புதிய அரசாங்கத்திடம் இருந்து பல விடயங்களை நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றாகள் என்பதைப் புரிந்துகொண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை , தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு,தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உட்பட அனைத்துப் பிரச்சினைளுக்கும் புதிய அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும். மற்றெந்த அரசாங்கங்களையும் விட பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள இந்த அரசாங்கம், இனிமேல் எந்தச் சாட்டுப்போக்குகளும் சொல்லி தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை தட்டிக்கழிக்காமல் அவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

நிறைவாக

“இன்று சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கிறார். அவரது திருப்பெயரோ ‘வியப்புக்கு உரியது இறைவன்,அமைதியின் அரசு என்றுமுள தந்தை’ என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” (எசா 9:1இ5; லூக் 1:33). இத்தகைய சிறப்புக்குரிய பாலக இயேசு நம் அனைவருக்கும் அமைதியை நல்வாழ்வை அருள்வாராக!

உங்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்மஸ் புதுவருட நல்வாழ்த்துக்களையும் இறை ஆசீரையும் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை நாட்டின் திருத்தூதரான தூய யோசவ்வாஸ் அடிகளாரின் பரிந்துரை நமக்குக் கிடைப்பதாக! நமது மறைமாவட்டத்தின் பாதுகாவலியாகிய மடு அன்னை நம்மோடு பிரசன்னமாக இருந்து தாய்க்குரிய பாசத்தோடு நம்மை வழிநடத்துவாராக.

இப்படிக்கு
கிறிஸ்துவில் உங்கள்மேல் பற்றுள்ள

…………………………
ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ
மன்னார் மறைமாவட்ட ஆயர்

குறிப்பு : இம்மடலை திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுகிழமை மறைமாவட்டத்தின் எல்லாத் திருப்பலி வேளைகளிலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் இறைமக்களுக்கு வாசித்துத் தெளிவுபடுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *