தகவல் தொடர்பாடல் பணி என்பது கடவுளின் ஓர் அழைப்பு எனவும் இப்பணி எல்லாவற்றிற்கும் மேலாக படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப ஊடகங்களை திறமையாக பயன்படுத்தி இதயத்துடன் நெருக்கமாக தொடர்புகொள்ளும் மறைபணியாக அமையும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வியாழக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் திருப்பீட செய்தித்தொடர்பாளர்களை சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளான உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக் கொண்டு நீதியை மார்புக்கவசமாக அணிந்து அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை உங்கள் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள் என்ற வரிகளை மேற்கோள்காட்டி அதன்படி வாழவூம் வலியுறுத்தினார். மிகச்சிறப்பான மிகப்பெரிய பணிக்கு அழைக்கப்பட்டிருக்கும் செய்தித் தொடர்பாளர்கள் ஒவ்வொருவரும் கருத்தியல் சித்தாந்தங்கள் என்னும் உயர்ந்த சுவர்களை எழுப்பாமல் இணைப்பின் பாலங்களை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை வேறுபாடுகளை உருவாக்கும் கலாச்சாரம் என்பது “இது என் முறையல்ல அவர்கள் செய்யட்டும்” என்று கை கழுவுகின்ற வேதனை தருகின்ற கலாச்சாரம் என்றும் கூறினார். அத்துடன் திருஅவையில் நாம் ஒற்றுமையுடன் வாழ்ந்து சமூக வாழ்வின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் கிறிஸ்துவில் நம்மைக் கவர்கின்ற மற்றும் ஈர்க்கின்ற இறைஅன்பை நம் வாழ்வில் எதிரொலிக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கடவுள் நம்மை அன்பு செய்கின்றார் அழைக்கின்றார் மன்னிக்கின்றார் என்பதை உணரும் போது நாம் திருஅவையாக மாறுகின்றோம் எனவும் மேலும் அவர் குறிப்பிடுகின்றார். ஒன்றிணைந்து ஈடுபாட்டுடன் உழைக்கவும். புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ளவும் புதிய பாதைகளில் பயணிக்கவும் டிஜிட்டல் எண்ணிமய சுழலில் வாழவும் அஞ்ச வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை இயேசுவின் அன்பை பிறருக்கு எடுத்துரைக்கக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

