பாலகனாய்ப் பிறந்த பாலஸ்தீனப் பாலகன் பாமரர்க்காய் பிறந்தவரா?

ARTICALS

டிசம்பர் மாதத்திற்கு ஒரு தனிச்சிறப்பும் பெருமையும் உண்டு. ஆண்டின் இறுதி மாதம் இனிய மார்கழிக் குளிர் மாதம் என்பது மட்டுமல்ல வரலாற்றை இரண்டாகப் பிரித்து புதிய வரலாறு படைக்கும் மீட்பின் நாயகர் உலக சரித்திரத்தை திருப்பிப் போட்ட உத்தமர் இயேசு பிறந்த மாதம் என்பது இந்த மாத்திற்கு இன்னும் அதிக பெருமை தருவதாகும். ஆண்டாண்டு தோறும் இதை நினைத்துக் கொண்டாடும் இனிய விழாக்களுக்கும் அதிகமான ஆடம்பரங்கள், அலங்காரம், தோரணம்,கொடிகள், பனி பொழியும் பசுமை வெள்ளை நிறக் காட்சிகள் அனைத்திற்கும் பஞ்சமே இல்லை. மகிழ்விற்கும் இன்பத்திற்கும் பெயர் போன புனித, புதுமை பொலிவு மாதம் டிசம்பர் என்பது மிகையாகாது.

டிசம்பர் மாதக் குளிரில் மலர்ந்த பாலஸ்தீனப் பாலகன் பிறப்பிலும் ஒரு தனி வரலாறு புதைந்துள்ளது. நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவு உயரத்திற்கு அது. ஏழை நலிந்த மக்களை உயர்வுக்குக் கொண்டு செல்கிறது. இயேசுவின் அவதாரத்தின் ஆரம்ப இடம் சாதாரண எளிய மக்கள் வாழும் பகுதி, சிறிய மாட்டுத்தொழுவம், ஆடு மாடுகளின் கூடாரம், ஐந்தறிவு ஜீவன்கள் அலை மோதும் அணிவகுப்புப் பகுதி,ஆடுகளைக் காவல் காக்க நகரலிருந்து தூரத்தில் தெரிவு செய்த இடம் நாகாரீகம் எட்டிப் பார்க்கும் எளிய மானிடன் இருப்பிடம் கண் விழித்துக் காத்துக் கிடக்கும் காவலர் கூட்டமாக வாழும் பகுதி இப்படி எளியவர் வாழும் ஒரு பகுதியைத் தான் பார் போற்றும் பாலகன் தன் மனித அவதாரத்திற்காய் அவதானிக்கிறார். பாலகன் பிறந்த பாலஸ்தீன நாடும் புவி கோளத்தின் பரப்பில் புறம்பே தள்ளப்பட்ட ஒரு பாலை நிலப் பகுதியாகும். வறண்டது, வளமற்றது, சிறியது, உரோமையர்,கிரேக்கர் எல்லோரும் பாதம் பதித்து விடுதலை தராது அடிமைப்படுத்தியது, தாழ்ந்த நிலம் விளிம்புப் பகுதி என்றெல்லாம் சொல்லலலாம். அதுவே காலம் கடந்த கர்த்தர் இயேசு தேர்ந்தெடுத்த உன்னத பிறப்பிடமாகிறது.

பாலன் இயேசு முதலில் பார்த்தவர்களும் எளியவர்களே. இடையர் கூட்டம், மந்தையின் காவலர்கள்,ஆடு மாடுகளைப் பராமரிப்பவர்கள் நகர விளிம்பிற்கு வெளியே நடமாடியவர்கள் மாசில்லா மனதுடன் அழுக்கில்லா அழகான இயற்கையுடனும் அனுதினமும் அமைதியை அனுபவித்து ஆடிப்பாடிய ஆயர்கள், இந்த எளிய மனிதர்களே இயேசு பிறந்ததை, வானதூதர்களின் வாழ்த்துப்பாடலை,வழிகாட்டி வழிநடத்தும் விண்மீன்களை, கீழ்திசை அரசர்களை எல்லாவற்றிற்கும் மேலாக காலம் காலமாய் காத்துக் கிடந்த இஸ்ரயேலின் மீட்பரை முதலில் பார்த்து பரவசமடையும் பாக்கியத்தைப் பெற்று மகிழ்கிறார்கள். இயேசுவின் பிறப்பு நலிந்தவர்,எளியவர்க்கு முன்னுரிமை, முதன்மை இடம் கொடுக்கிறது என்பது இங்கு தொடுகிறது. ஊருக்கு வெளியே ஊர்க் காவல் செய்யும் அன்னியர்கள் மத்தியில்,தூங்காமல் காவல் காத்துக் கிடக்கும் கூட்டத்தின் இடையில், ஏழை இடையர்களின் நடுவே உன்னதரின் பிறப்பு உருப்பெறுகிறது என்பது ஏழையர், நலிந்தவர் பாமரர் மீது அவர் கொண்ட ஒருவித தனிப்பட்ட அன்பு, கவனம், கரிசனையைக் காட்டுகிறதன்றொ?

சொகுசு வாழ்வு உல்லாசம் எதுவும் சொந்தமாகக் கொள்ளாதவர்கள், வரலாற்று ஏடுகள் அதிகம் பேசாதவர்கள், அகில உலகம் நினைத்துப் பார்க்காதவர்கள், மௌனக் கூட்டமாய் மறைந்து வாழ்ந்தவர்கள்,நகரின் ஓரத்தில் ஒதுங்கி நின்றவர்கள்,யாருமே தேடாத எளிய மக்கள், பார் போற்றும் பெருமகனின் மனித உருபெறும் நிகழ்வை நேரில் கண்டு மகிழ்ந்ததுடன் 2000 ஆண்டு கால உலக வரலாற்றிலும் நிரந்தர இடம் பிடித்து உயர்ந்து நிற்கிறார்கள் என்பது, பாலஸ்தீனப் பாலகனின் பிறப்பு பாமரர்க்கு ஒரு தனிப் பெரும் பெருமை, புகழ் சேர்ப்பது,உயரத்திற்கு கொண்டு செல்வது என்பதை ஐயம் இன்றி இன்னும் ஒருமுறை உறுதி செய்கிறது.

பாமரரை முதலில் தேடிய பாலகன் இயேசு தந்த ஒரு நல்ல செய்தியும் உண்டு. “உலகில் ஆண்டவருக்கு உகந்தவர்க்கு அமைதி உண்டாகுக” என்பதே அந்த செய்தி (லூக் 2:14). “உலகிலே அவா; தயவு பெற்றவர்க்கு அமைதி ஆகுக” என்பது பழைய விவிலிய மொழி பெயர்ப்பு. அமைதி என்பதற்கு கிரேக்க விவிலியம் பயன்படுத்தும் சொல்லாடல் என்பதாகும். இது ஒரு வாழ்த்துச் செய்தி! பல அர்த்தங்களைக் கொண்டது. அமைதி, ஒற்றுமை,சமாதானம்,பாதுகாப்பு,வளர்ச்சி,உடல் நலம், ஒப்புரவு, கடவுளுடனும் மனிதருடனும் ஒப்புரவு என்று பலவாறு இதற்று அர்த்தம் கொடுக்கலாம். புதிய ஏற்பாட்டைப் புரட்டும் போது இதன் ஆழ்ந்த அர்த்தங்கள் இன்னும் தெளிவாகிறது. நாட்டின் அமைதி (லூக் 14:32) ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு (லூக் 12:51)இ உலக அமைதி (மத் 10:34இ லூக் 2:4-12:51)துன்பங்களிலிருந்து விடுதலை (யோவா 16:33) ஆபத்து அகன்ற அமைதி (1தெச 5:3 லூக் 11:21) வீட்டில் அமைதி (மத் 10:13 லூக் 10:6)இ நோயிலிருந்து சுகம் (மத் 5:34இ லூக் 7:50) உள்ளத்தில் அமைதி (லூக் 2:29)இருள் சாவிலிருந்து விடுதலை (லூக் 1:79)இ விண்ணிலும் சாவிலிருந்தும் விடுதலை (லூக் 1:79)இ விண்ணிலும் மண்ணிலும் அமைதி (லூக் 11:38)இ கடவூள் கொடையாகத் தரும் அமைதி (லூக் 24:36இ யோவா 14:27இ 16:33) என்று பல விதமான பாதுகாப்பை உடல் உள்ள நலனை மகிழ்வை சுகத்தை முழுமையான வாழ்வை நிறைவை வளமையை விடுதலையை ஏழையருக்கு அறிவிப்பதாகிறது இந்த வாழ்த்து. அச்சுறுத்தல்கள் ஆபத்துக்கள் பாதுகாப்பின்மை அவமதிப்பு பேதங்கள் குழப்பங்கள் கலவரங்கள் என்று பல விதங்களில் இன்று பாமரர்கள் பாதிக்கப்படுகிறார்கள். வேதங்களைக் கொண்டே வெறியாட்டங்களின் விளைநிலமாகி பாதிப்புக்குள்ளாகிறார்கள் அப்பாவிகள். மத இன மொழி ஜாதி என்று தரமற்ற உணர்வுகளைத் தீண்டி விட்டு நாட்டை கலவரப் பகுதியாக்கி சாதாரண மக்களைப் பலி கொடுக்கிறது இன்றைய அதீத சூழல். இப்படி கீழ்த்தர உணர்வுகளால் பிளவுகளால் பேதங்களால் பாதிக்கப்படுவதும் பலியாவதும் பெரும்பாலும் பாமர மக்களே ஆவார்.

எனவே இன்றைய சூழலில் இயேசு பாலகன் பிறந்த வளர்ந்த போதித்தஇ சாதித்த நிலப்பரப்பில் அமைதியற்றநிலை புண்ணிய பூமி என கொண்டாடப்படும் மண்ணில் சமயங்களின் அடிப்படை வாதஞ்களும் கடுங்கோட்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. ஒரே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் உறவுகள் இனம் மதம் வேறுபாட்டால் உயிர்பலி எடுக்கும் மிக நீண்ட பிணக்காக பாலஸ்தீனம் இஸ்ரயேல் பிரச்சினை நீண்டு செல்கிறது.எளியவரை முதல் முதலாகத் தேடி வந்து அவர்கள் வாழும் பாலஸ்தீனப் பகுதியில் பிறந்த இயேசு அங்கு வாழும் நல்மனத்தோருக்கு அமைதியை முழுமை வாழ்வை முதன் முதலில் அறிவித்தார். பார்போற்றும் பாலகனின் பிறப்பில் பாலஸ்தீனப் பாமரர் முதலிடமும் முக்கிய சிறப்பும் பெறுவது நம் சிந்தனையைத் தூண்டுகிறது. அன்றுபோல இன்றும் எளியவர் நலிந்தவர் வாழ்வில் வேரோட்டமான மாற்றம் முன்னேற்றம் முழு மனித வாழ்வு வரும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியுடன் அறிவிக்கிறது இயேசுவின் பிறப்பு. பெருவாரியான ஏழைகள் நாளொரு மேனியாக நலிந்து வாழும் இன்றைய சூழலில் ஏழைகளுக்கு முழுமையான வாழ்வை நிறை வாழ்வை நிலை வாழ்வை புது வாழ்வை புத்துலக நம்பிக்கையை மீண்டும் உறுதிபட அறிவிப்பதாகிறது. 2023 ஆம் ஆண்டின் கிறிஸ்து பிறப்பு விழா. அமைதியின் விழுதுகள் ஏழையர் வாழ்வில் வேர்களாகி விதைகளாகி பெரிய மரங்களாகி வேரோட்டமான மாற்றத்தை நிச்சயம் உருவாக்கும் என்பதையே இந்தப் பாலஸ்தீனப் பாலனின் பிறப்பு அறிவித்து நிற்கிறது. நலிந்தவர் வாழ்வை நலமாக்கும் நற்செய்தியாக ஏழையர் விடுதலையும் முழு வாழ்வும் முழுமையாகப் பெற்று உலக சமாதானமும் அமைதியும் மகிழ்ந்திடும் ஒரு சிறு கருவியாக நாமும் மாறினால் 2023 கிறிஸ்துமஸ் விழா இன்னும் அதிக அர்த்தமுள்ள விழாவாக மாறும் என்பதில் ஐயமில்லை அன்றோ?

அ. ஜெயநாயகம் நோயல் டானியல் காத்தன்குளம் வட்டல்கண்டல் மன்னார்.