சிறப்பு ஜூபிலி ஆண்டின் பரிபூரண பலன்களை இறைமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் கடந்த 05/01/2025 அன்று மாலை 3.30 மணிக்கு புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆயத்தம் செய்யப்பட்ட புனித கதவைத் (Holy Door) திறந்து வைத்துள்ளார். ஜூபிலி ஆண்டானது, 25 ஆண்டுகளுக்கு ஒருமுறையே வருகின்றது. அதிலும் கத்தோலிக்க இறைமக்களுக்கு இது ஒரு சிறப்பு மிக்க ஜூபிலி ஆண்டாகும் ஏனென்றால் இயேசுவின் மனித அவதாரத்தின் 2025 ஆண்டுகள் நிறைவு விழாவாகும். உலகம் முழுவதிலுமிருந்து 30 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் ரோம் நாட்டிற்கு சென்று தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த நுழைவாயிலை கடந்து செல்வார்கள் என நம்பப்படுகிறது. அதேவேளை, எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதியுடன் இறைவனின் திருக்காட்சி பெருவிழாவில் புனித நுழைவாயிலின் மூடுதலுடன் ஜூபிலி ஆண்டு முடிவடையும். முன்னதாக, கடந்த 2000ஆம் ஆண்டு பாப்பரசர் புனிதர் இரண்டாம் யோவான் பவுலினால் (Pope Saint John Paul II) ஜூபிலி கொண்டாட்டத்திற்காக புனித கதவு திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














