New bishop of mannar

மறைமாவட்டத்தின் நான்காவது ஆயராக மன்னார் மண்ணின் மகன் அருட்பணி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அடிகளார் நியமனம்

CHURCH NEWS DIOCESE

இலங்கை திருநாட்டில் மறைசாட்சியாக குருதி படிந்த மன்னார் மறைமாவட்டத்திற்கு நான்காவது ஆயராக மன்னார் மண்ணின் மகன் அருட்பணி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்கழி மாதம் 14ம் திகதி சனிக்கிழமை இத்தாலி நாட்டின் உரோமாபுரி புனித பேதுருவானவார் சதுர்க்கத்தில் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12.00 மணிக்கு திருத்தந்தை இவ்வறிவிப்பை வழங்கியிருந்தார்
மங்களகரமான இந்நற்செய்தியை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் தமது குருக்கள், துறவிகள் மற்றும் இறைமக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அந்நேரத்தில் மறைமாவட்டத்திலுள்ள அனைத்து ஆலய மணிகளும் உவகை பேரொலி எழுப்பியிருந்தன.

அருட்பணி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 1965 ஆடி 12ம் திகதி மன்னார் மாவட்டத்தின் அடம்பன் இத்திக்கண்டல் கிராமத்தில் உதித்தவராவார். யாழ் புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தில் இணைந்து தனது இறையழைத்தல் பயணத்தை ஆரம்பித்த இவர் யாழ் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் பெரிய குருமடத்தில் தனது மெய்யியல் மற்றும் இறையியல் உருவாக்கத்தை பெற்றார்.

1994 சித்திரை மாதம் 07ம் திகதி மன்னார் மறைமாவட்டக் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட தந்தை அவர்கள் மறைமவட்டத்தின் பலதரப்பட்ட பணித்தளங்களில் சிறப்பான பணிகளையும் ஆற்றினார். முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் செயலாகவும் 1994 முதல் 1996 வரை விசேட பணியாற்றினார். மறைமாவட்டத்தின் செட்டிகுளம்,பள்ளிமுனை,வங்காலை,செபஸ்தியாh; பேராலயம், பேசாலை போன்ற பங்குகளில் பங்குத்தந்தையாக பெரும்பணியாற்றினார். மன்னார் மறைமாவட்டத்தின் இளையோர் உருவாக்கத்தில் தன்னை இணைத்து இளைஞர்கள் ஆணைக்குழு இயக்குனராக அரும்பணி ஆற்றினார். மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் அதிபராக பணியாற்றிய தந்தை அவர்கள் பல இளம் நெஞ்சங்கள் இறையழைத்தலில் வேரூன்றி வளர பெரும் பங்காற்றினார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தின் பல்கலைக்கழகத்தில் விசேட பட்டப்படிப்பை மேற்கொண்ட தந்தை அவர்கள் கடந்த 2023ம் ஆண்டு முதல் மன்னார் மறைமாவட்டத்தின் இதயம் என அழைக்கப்படும் மருதமடுத் திருத்தலத்தின் பரிபாலகராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *